Sunday, January 14, 2018






வே. சங்கரன் என்ற

தோழர் "ஞாநி"

மறைந்தார் ...!!!

வே .சங்கரன்    "இந்தியன் எக்ஸ்பிரஸ் " பத்திரிகையில் நிருபராக இருந்த காலத்திலிருந்து எனக்கு பழக்கம். அவருடைய தந்தை  வேம்பு அவர்களும் "இந்தியன் எக்ஸ்பிரஸ் " பத்திரிகையில் மூத்த நிருபராக இருந்தவர். என்னுடைய உறவினர் பி.வி.ராமசந்திரன் என்பவர் அதே பத்திரிகையில் 50ம் ஆண்டுகளில் பணியாற்றிய காலத்திலிருந்து நிருபர் வேம்பு அவர்களை எனக்கு தெரியும்.

பத்திரிகையா;ளர் சந்திப்பில் சங்கரனை பார்த்துபழகி இருந்திருக்கிறேன்.துடிப்பு மிக்க இளைஞர். எந்தவித தயக்கமும் இன்றி கேள்விகளை கேட்பார். பல சந்தர்ப்பங்களில் "தர்மசங்கடமான" நிலைமைகளை ஏற்படுத்தி இருக்கிறார். 1977ம் ஆண்டு காந்தி கிராமத்தில்  பேராசிரியர் ராமானுஜம் அவர்கள் தேசிய நாடகப்பள்ளியின் சார்பில் நாடக பயிற்சி  முகாம் நடத்தினார். கேரளத்திலிருந்து குரூப், கர்நாடகாவிலிருந்து பி.வி கராந்த, சிவராம கரந்த் ,என்று முன்னோடிகள் வகுப்பு எடுத்தனர்> அந்த அப்பயிற்சிக்கு  ஜெயந்தன்,ப.ரத்தினம் , கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் மு.இராம சாமி, (அப்போது மாணவர் ) என்று 15 பேர்     மணவர்களாமே இருந்தோம். அந்த முகாமுக்கு சங்கரனும் வந்திருந்தார்அப்போது தான் அவரோடு நெருங்கி பழக்க முடிந்தது பத்து பதினைந்து நாள் அங்கேயே தங்கி  இருந்தோம்

மாணவர்கள் நாடகம் தயாரிக்க வேண்டும். சங்கரன் "கடியாரம் " என்ற நாடகத்தை போட்டார். குரூப் எழுதிய "திரௌபதி வஸ்திராபரணம் " நாடகத்தில்நானும் சங்கரனும் கட்டியங்காரனாக நடித்தோம்.  

அதோடு "நாற்காலி காரர் " என்ற நாடகத்தில் நான் நாற்காலிக்காரராக நடிக்க சங்கரன் முக்கிய பாத்திரத்தில் நடித்தார் . பின்னாளில் "தீம்தரி கிட    "  என்ற பத்திரிகையை நடத்தினார் .

அப்போது தான் வே சங்கரன் தான் ஞாநி என்பதைத்தெரிந்து கொண்டேன். ஆரம்பத்தை "ஞானி " என்றுதான் எழுதி வந்தார்.கோவை பழனிசாமி ஞானி என்ற அப்பெயரில் எழுதிவந்ததால் ஞாநி என்று மாற்றிக்கொண்டார்.

அரசியல் ரீதியாக வி.பி சிங் ஆதரவாளராக இருந்தார்.

ராஜிவ் காந்தி  படுகொலையில் "சிவராசன், தனு "ஆகியோர்  சம்மந்தப்பட்டதும்,அவர்களுடைய புகைப்படமும் ஞாநி யின் மூலமாகவே உலகத்திற்கே தெரியவந்தது. ராஜிவ் காந்தி  கொலை செய்யப்படுவதற்கு முன்பாக சிவராசன் வி.பி சிங் கூட்டத்திற்கு சென்று பரிசோதனை நடத்தி இருக்கிறான் .சிங்  கூட்டங்களுக்கு சென்றிருந்த ஞாநி  எடுத்த  படத்தில் சிவராசனும்  தனுவும்  இருந்துள்ளனர் . பிரபாகரன் அமைப்பு இதில் தொடர்பு கொண்டிருந்தது அதன் பிறகே உலகிற்கு தெரியவந்தது.

ஞாநி தொலைக்காட்சி யோடும் தொடர்பு கொண்டிருந்தார்.பெரியாரின்   வாழ்க்கையை   சித்தரிக்கும்  தொடரை  எடுத்தார் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது.

தமிழ்  சமூகம் பன்முக திறமை கொண்ட சிறந்த செயல்பாட்டாளரை  இழந்து   விட்டது .


0 comments: